கம்பரா? வம்பரா?

தான் ஐநூறு பொன் பெற்று ஏழையாக்கிய தாசியை ஔவையார் கூழுக்குப் பாடி செல்வச் சீமாட்டியாக ஆக்கியதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மேல் அசூயை கொண்டாராம்.
ஔவை ஒரு சமயம் குலோத்துங்கன் அரசவைக்கு வருகை தந்தபொழுது கம்பர் அவரைப் பார்த்து ஔவையாருக்கும் ஆரைக்கீரைக்கும் சிலேடையாக

ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ

என்று கூற ஔவையார் கோபங்கொண்டு

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா விடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது


என்று பதிலிறுத்தாராம்.

எட்டு (8) என்ற எண்ணுக்குத் தமிழில் "", கால் (1/4) என்ற எண்ணுக்கு "", அதனால் எட்டேகால் லட்சணமே என்றால் "அவலட்சணமே" என்றாகிறது. பெரியம்மை என்றால் மஹாலக்ஷ்மியின் அக்காளான மூதேவி. கூரையில்லா வீடென்றால் குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் அனுமன் ஒரு குரங்கு. கம்பர் ராமாயணத்தை எழுதியதால் அவர் ஒரு வகையில் ரராமனின் தூதுவனாகிறார். நீ சொன்னது ஆரைக்கீரை எனும் பொருள்பட அடீ என்று சொன்னதற்கு பதிலுரையாக "அடா"வைச் சேர்த்து ஆரையடா என்றார்.

அம்பர் - கம்பர்

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டைச்சேர்ந்த அம்பர் எனும் ஊர் வழியாகக் கால்நடையாய்ச் சென்றுகொண்டிருக்கையில் இடையில் சற்றே இளைப்பார வேண்டி அத்தெருவிலுள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார். அந்த வீட்டில் சிலம்பி எனும் பெயர்கொண்ட தாசி ஒருத்தி வசித்துவந்தாள். தன் வீட்டுத் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருக்கக்கண்டு வீட்டைவிட்டு வெளியில் வந்த தாசி ஔவையாரைக் கண்டு நலம் விசாரித்துப் பின்னர் அவர் பசியாயிருப்பதை அறிந்து தான் அருந்த வைத்திருந்த கூழை ஔவையாருக்குக் கொடுத்தாள். அவள் கொடுத்த கூழை அருந்துகையில் ஔவையார் அவ்வீட்டின் சுவற்றில்

தண்ணீருங்காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே


என்று இரு வரிகள் கரியினால் எழுதப்பட்டிருப்பதைக் கண்ணுற்றார். இது யார் எழுதியதென்று அவர் அத்தாசியைக் கேட்கவே, குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவர் கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்வதைக் கேள்விப்பட்டு, தானும் வறுமை நீங்க வேண்டுமென்ற ஆவலால் கம்பரிடம் தன்னைப் பற்றிப் பாடக் கேட்டதாகவும், கம்பர் வாயால் பாடல் பெற ஆயிரம் பொன் தர வேண்டியிருந்தும் தன்னிடம் ஐநூறு பொன்னே இருந்தததால் அதைக் கொடுத்ததாகவும், அவர், ஆயிரம் பொன்னுக்குத்தான் முழுப் பாடல் ஐநூறு பொன்னுக்கு அரைப் பாடல்டதான் எனக்கூறி, ஒரு கரித்துண்டால் அவ்விரு வரிகளையும் சுவற்றில் எழுதிச் சென்றதாகவும், அதனால் தான் கையிலிருந்த ஐநூறு பொன்னையும் தொலைத்துவிட்டு மேலும் வறுமையுற்றதாகவும் கூறினாள்.

அவள் கொடுத்த கூழுக்கு நன்றிக் கடனாக ஔவை ஒரு கரித்துண்டினால் அவ்விரு வரிகளின் கீழ் இரு வரிகள் மேலும் எழுதி,

தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு


என்று பாடலைப் பூர்த்தி செய்தாராம். ஔவையார் வாயால் பாடல் பெற்ற சிலம்பி அதுபோலவே செம்பொன்னாலான சிலம்புகளை அணியுமளவிற்குச் செல்வச் சீமாட்டியாக ஆனாள் என்பது கதை.

ஔவைப் பாட்டி

ஔஔவைப் பாட்டி என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஏனெனில் குழந்தைகளூக்கு வழிகாட்டும் அருள்மொழிகள் பலவற்றை அவர் அள்ளி வழங்கியுள்ளார், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை உட்பட.

ஔவையாரின் வரலாறு மிகவும் ஸ்வாரஸ்யமானது. ஔவையார் தமிழ்த் திரைப்படம் ஔவையாராக கே.பி. சுந்தரம்பாள் நடித்து 1963ஆம் ஆண்டு வெளிவந்தது. அதில் ஔவையாரின் வரலாற்றை மிக அற்புதமாகப் படமாக்கியுள்ளனர். ஔவையாரைப்பற்றி நான் நூல்களில் படித்ததையும் ஔவையார் திரைப்படம் பார்த்த அனுபவத்தையும் வைத்து ஔவையார் பற்றிய சில சுவையான செய்திகளை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

ஔவையார் சிறுமியாய் இருக்கும்பொழுது ஒரு புலவர் அவரது தந்தையாரைக் காண வருவார். அவர் எழுதிய கவிதை ஒன்று,

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா
-

என்று பாதியில் நின்றுவிட்டதென்று சொல்ல அப்போது அங்கு வரும் சிறுமி ஔவை

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.


என்று மீதிப்பாடலைப் புனைந்து கூறுவார்.

இப்பாடலின் பொருள் யாதெனில், "நாம் ஒருவருக்கு உதவி செய்கையில் அதன் கைம்மாறான பலன் நமக்கு என்று கிடைக்கும் என்று எண்ணிச் செய்யக்கூடாது. தென்னை மரம் அதன் வேரில் ஊற்றும் தண்ணீரை உண்டு வளர்ந்து, இளநீராகவும் தேங்காய்களாகவும் தன் தலையில் உருவாக்கி நமக்குத் தருவது போல் நாம் பிறர்க்குக் கைம்மாறு கருதாமல் உதவினால் நமக்கு உதவி தேவைப்படுகையில் அது தானாகவே கிடைக்கும்" என்பதாகும்.