அம்பர் - கம்பர்
ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டைச்சேர்ந்த அம்பர் எனும் ஊர் வழியாகக் கால்நடையாய்ச் சென்றுகொண்டிருக்கையில் இடையில் சற்றே இளைப்பார வேண்டி அத்தெருவிலுள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார். அந்த வீட்டில் சிலம்பி எனும் பெயர்கொண்ட தாசி ஒருத்தி வசித்துவந்தாள். தன் வீட்டுத் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருக்கக்கண்டு வீட்டைவிட்டு வெளியில் வந்த தாசி ஔவையாரைக் கண்டு நலம் விசாரித்துப் பின்னர் அவர் பசியாயிருப்பதை அறிந்து தான் அருந்த வைத்திருந்த கூழை ஔவையாருக்குக் கொடுத்தாள். அவள் கொடுத்த கூழை அருந்துகையில் ஔவையார் அவ்வீட்டின் சுவற்றில்
தண்ணீருங்காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே
என்று இரு வரிகள் கரியினால் எழுதப்பட்டிருப்பதைக் கண்ணுற்றார். இது யார் எழுதியதென்று அவர் அத்தாசியைக் கேட்கவே, குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவர் கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்வதைக் கேள்விப்பட்டு, தானும் வறுமை நீங்க வேண்டுமென்ற ஆவலால் கம்பரிடம் தன்னைப் பற்றிப் பாடக் கேட்டதாகவும், கம்பர் வாயால் பாடல் பெற ஆயிரம் பொன் தர வேண்டியிருந்தும் தன்னிடம் ஐநூறு பொன்னே இருந்தததால் அதைக் கொடுத்ததாகவும், அவர், ஆயிரம் பொன்னுக்குத்தான் முழுப் பாடல் ஐநூறு பொன்னுக்கு அரைப் பாடல்டதான் எனக்கூறி, ஒரு கரித்துண்டால் அவ்விரு வரிகளையும் சுவற்றில் எழுதிச் சென்றதாகவும், அதனால் தான் கையிலிருந்த ஐநூறு பொன்னையும் தொலைத்துவிட்டு மேலும் வறுமையுற்றதாகவும் கூறினாள்.
அவள் கொடுத்த கூழுக்கு நன்றிக் கடனாக ஔவை ஒரு கரித்துண்டினால் அவ்விரு வரிகளின் கீழ் இரு வரிகள் மேலும் எழுதி,
தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு
என்று பாடலைப் பூர்த்தி செய்தாராம். ஔவையார் வாயால் பாடல் பெற்ற சிலம்பி அதுபோலவே செம்பொன்னாலான சிலம்புகளை அணியுமளவிற்குச் செல்வச் சீமாட்டியாக ஆனாள் என்பது கதை.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home